×

உடைந்த குடிநீர் பைப் சீரமைப்பதில் அலட்சியம் ஒரு கி.மீ. தூர வயல் வெளியில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பழங்குடி மக்கள்: ஆழ்துளை கிணறு அமைக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, மே 29:  ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராம பழங்குடி இன கிராம மக்கள்  ஒரு கி.மீ தூரம் நடந்து வயல்வெளிக்கு சென்று  தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே அங்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் விவசாயிகள் மற்றும் பழங்குடி இன மக்கள்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஊராட்சி சார்பில் தினமும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீரை நிரப்பி, அதன் பின்னர்  அவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர்தொட்டிக்கு செல்லும் பைப் உடைந்து விட்டது. இதனால் குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்ற முடியவில்லை.

இதையறிந்த  பழங்குடியின மக்கள் குடிதண்ணீர் எடுப்பதற்கு ஒரு கி.மீ. தூரம் சென்று அங்குள்ள வயல் வெளிகளில் குடங்களில் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். எனவே உடைந்த குடிநீர் பைப்பை உடனே சீரமைத்து தொம்பரம்பேடு கிராம பழங்குடியின மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தொம்பரம்பேடு மக்கள் கூறியதாவது  :

தொம்பரம்பேடு கிராமத்தில்  கடந்த 20 நாட்களுக்கு மேலாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் பைப் உடைந்து விட்டதால், ஓரிரு  நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர்  நிறுத்தப்பட்டது.  

இதனால்  ஒரு கி.மீ. தூரம் சென்று தனியாருக்குச் சொந்தமான விவசாய மோட்டார் பம்ப் செட்டுகளில் இருந்துதான் குடங்களில் தண்ணீர் பிடித்து வருகிறோம்.  எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் விரைவில் உடைந்த குடிநீர் பைப்பை சீரமைத்து, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : wells ,field ,
× RELATED நெல்லியாளம் நகராட்சியில் பம்பு...